தீவுத்திடலில் பட்டாசு விற்பனை மும்முரம்
தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். தீபாவளி தினத்தன்று விதவிதமான பட்டாசுகள் வெடித்து மகிழ மக்கள் பிரியப்படுவார்கள்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடல் வளாகத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடல் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. தற்போது தீவுத்திடலில் பட்டாசு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பசுமை ரக பட்டாசுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
பல சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளிக்கு மறுநாளான 5-ந் தேதி வரை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.