குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னிமார் பகுதியில் 95.4 மி.மீ. பதிவாகி உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னிமார் பகுதியில் 95.4 மி.மீ. பதிவாகி உள்ளது.
கனமழை
தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்டும் விடுத்திருந்தது.
இந்த மழை நேற்றும் தொடர்ந்தது. நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது. கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
கன்னிமாரில் அதிகபட்சம் பதிவு
பேச்சிப்பாறை அணை- 50.6, பெருஞ்சாணி அணை-60.4, புத்தன் அணை- 58.2, சிற்றார்-1 அணை- 52.4, சிற்றார்-2 அணை-54, மாம்பழத்துறையாறு அணை- 41, முக்கடல் அணை- 32.2, பூதப்பாண்டி- 43, களியல்- 50.2, கன்னிமார்- 95.4, கொட்டாரம்- 15.6, குழித்துறை- 39.6, மயிலாடி- 42.2, நாகர்கோவில்- 54, சுருளக்கோடு- 71.6, தக்கலை- 20, குளச்சல்- 14, இரணியல்- 16.2, பாலமோர்- 38.2, ஆரல்வாய்மொழி- 32, கோழிப்போர்விளை- 33, அடையாமடை- 57, குருந்தங்கோடு- 35.4, முள்ளங்கினாவிளை- 31.6, ஆனைக்கிடங்கு- 40.2 என்ற அளவில் மழை பதிவானது. இதில் அதிகபட்சமாக கன்னிமார் பகுதியில் 95.4 மி.மீ. மழை பதிவானது.
அணை நிலவரம்
இந்த மழையினால் நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,360 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,635 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,093 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது. சிற்றார்-1 அணைக்கு வரத்து வினாடிக்கு 302 கன அடி தண்ணீரும், அணையில் இருந்து வினாடிக்கு 272 கன அடி தண்ணீர் உபரியாகவும் திறந்து விடப்பட்டது.
பொய்கை அணைக்கு வினாடிக்கு 16 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 63 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 30 கன அடியும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 16 கன அடியும் தண்ணீர் வந்தது. இதில் முக்கடல் அணையில் இருந்து மட்டும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 7.42 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
24 மணி நேரமும் கண்காணிப்பு
நேற்றுமுன்தினம் விடிய, விடிய பெய்த கனமழையால் குமரி மாவட்டத்தில் உள்ள பழையாறு, கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு அனைத்து ஆறுகளிலும் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தோவாளை கால்வாய், அனந்தனார் கால்வாய் உள்ளிட்ட அனைத்து கால்வாய்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும் குளங்களும் நிரம்பி மறுகால் பாயும் தருவாயில் இருந்து வருகின்றன.
மேலும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் மழையால் குமரி மாவட்ட அணைகள் 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பாலம் சரிந்தது
தொடர் மழையால் பூதப்பாண்டியை அடுத்த திடல் அருகே கடம்படி விளாகம் காலனியில் இருந்து தோவாளை கால்வாயை கடக்க பயன்படுத்தி வந்த காங்கிரீட்டால் ஆன பாலம் நேற்று முன்தினம் இரவு சரிந்து விழுந்தது.
மங்காடு பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் அவதி
தொடர் மழை காரணமாக நேற்று மாத்தூர் தொட்டிப்பாலத்தின் எதிர்புறம் உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாத்தூர் பகுதியில் இருந்து சப்பாத்து பாதை வழியாக பொன்னன்சிட்டி விளை, பறமன்கரை, முதலார் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள்.