கேரளாவுக்கு கடத்த முயன்ற 5½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 5½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 5½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கேரளாவுக்கு கடத்தல்
குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்கப்படும் அரிசி, மண்எண்ணெய் போன்றவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்வதாக போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
5½ டன் அரிசி
இதையடுத்து துைண சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு டெம்போவில் ரேஷன் அரிசி மூடைகள் கடத்தலுக்கு தயாராக இருப்பது கண்டறியப்பட்டது. அந்த டெம்போவை சோதனையிட்ட ேபாது 5½ டன் ரேஷன் அரிசி இருந்தது.
இதையடுத்து டெம்போவுடன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து நாகர்கோவில் உணவு பொருள் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.