தடுப்பு வேலி வேண்டும்
நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மிகவும் குறுகிய சாலையில் அமைந்துள்ளதால் நேருக்கு நேர் கனரக வாகனங்கள் வரும்போது பள்ளி முடிந்து வெளியேவரும் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகம் சாலையோரம் நடைபாதை அமைத்து தடுப்பு வேலி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி
நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க வேண்டும்
மார்த்தாண்டத்தில் இருந்து பனச்சமூடு, மாங்கோடு, காளைவிழுந்தான் கோவில், காஞ்சியோடு வழியாக ஐந்துள்ளிக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது பிற வழித்தடங்களில் அனைத்து பஸ்களும் இயங்க தொடங்கியுள்ள நிலையில், இந்த பஸ் மட்டும் இதுவரை இயங்கவில்லை. இதனால், காஞ்சியோடு, ஐந்துள்ளி போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பனச்சமூடு, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளுக்கு செல்ல பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியது உள்ளது. எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான்சன், காஞ்சியோடு.
ஆபத்தான கட்டிடம்
தென்கரை ஊராட்சிக்கு உட்பட பிரம்மபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே ஒரு பழமையான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் முன்பு, டி.வி. அறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இது சரியான பராமரிப்பு இன்றி பாழடைந்து இடியும் தருவாயில் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அங்கு படிப்பகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பி.ராஜேஷ், பிரம்மபுரம்.
அகற்றப்படாத மரக்கிளைகள்
நாகர்கோவில், ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி வளைவு சாலையில் கடந்த வாரம் மின்வாரியம் மூலம் மின்பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டன. இந்த மரக்கிளைகள் தற்போது சாலையோரம் குப்பைகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவை வெட்டப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இதுவரை அகற்றவில்லை. இதனால், சாலைேயாரம் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, மரக்கிளைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
மார்த்தாண்டத்தில் இருந்து கொடுங்குளம் செல்லும் சாலையில் அட்டைக்குளம் பகுதியில் கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. ஆனால், அந்த திட்டம் பாதியில் கைவிடப்பட்டதாக தெரிகிறது. தற்போது தோண்டப்பட்ட இடம் சரியாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையில் தோண்டப்பட்ட இடத்தை தரமான முறையில் சீரமைக்க வேண்டும்.
-ஏ.ராஜன், கொடுங்குளம்.