சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு
கர்நாடகத்தில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பெங்களூரு:
2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி, ஹாவேரி மாவட்டம் ஹனகல் ஆகிய 2 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தது. அந்த 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 30-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். அந்த தொகுதிகளில் ஒட்டு மொத்தமாக 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு இடையே தான் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. நேற்று காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
வரிசையில் காத்து நின்று...
சிந்தகி தொகுதியில் 101 கிராமங்களில் 297 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் 57 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருந்தது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த்னர். அங்கு 1302 தேர்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ஹனகல் தொகுதியில் 263 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்தமாக 2 தொகுதிகளிலும் 1,234 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதுமே 2 தொகுதிகளிலும் காலையிலேயே வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்கள் திரண்டு வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள். இதனால் காலையில் 2 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் முன்பாக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். வயதானவர்களில் இருந்து இளைஞா்கள், இளம்பெண்களும் காலையிலேயே வந்து ஓட்டுப்போட்டு விட்டு செல்வதை பாா்க்க முடிந்தது.
விறு, விறுப்பான வாக்குப்பதிவு
இதனால் காலையில் இருந்தே சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மதிய நேரத்தில் மட்டும் வாக்குச்சாவடிகள் முன்பாக வாக்காளர்கள் இல்லாமல் இருப்பதை பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் மதியம் 4 மணிக்கு பின்பு வாக்குச்சாவடிகள் முன்பு வாக்காளர்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. கிராமப்புற மக்கள் என்பதால் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போட்டு சென்றார்கள்.
சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளை சேர்ந்தவர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. உடனடியாக போலீசார் தலையிட்டு, 2 கட்சிகளையும் சேர்ந்தவர்களையும் சமாதானப்படுத்தினார்கள். சில வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பூஜை செய்தனர். அதன்பிறகு, ஓட்டுப்போட அனுமதி வழங்கினார்கள்.
அமைதியாக நடந்தது
ஒரு சில கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தேர்தல் அதிகாரிகளுடன், வாக்காளர்கள் வாக்குவாதம் செய்தார்கள். பின்னர் எந்திரங்கள் சரி செய்யப்பட்டு வாக்காளர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் சிறு, சிறு சம்பவங்களை தவிர்த்து அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
சிந்தகி மற்றும் ஹனகல் தொகுதிகளில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி சராசரியாக 69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அதன்பிறகு, இரவு 7 மணிவரை ஓட்டுப்போட அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் 73 முதல் 75 சதவீத வாக்குகள் 2 தொகுதிகளிலும் சராசரியாக பதிவாகி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
கொரோனா விதிமுறையின்படி வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் ஓட்டு போட்டு சென்றனர்.இடைத்தேர்தலையொட்டி சிந்தகி தொகுதியில் ஆயிரம் போலீசாரும், ஹனகல் தொகுதியில் 1,100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. 2 தொகுதிகளையும் கைப்பற்றுவது யார்? என்பது அன்றைய தினம் தெரியவரும்.