நெல்லையில் தொடர் மழை; கோவிலை சூழ்ந்த வெள்ளம்
ெநல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
பரவலாக மழை
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த தொடர் மழை நேற்றும் நீடித்தது. நெல்லை, பாளையங்கோட்டை, மூைலக்கரைப்பட்டி, பாபநாசம், மணிமுத்தாறு, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் காலையில் பரவலாக மழை பெய்தது. நெல்லையில் அதிகாலையில் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது.
பாளை.யில் 75 மில்லி மீட்டர் பதிவு
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 75 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழையால் நெல்லை டவுன், பாளையங்கோட்டை பகுதிகளில் சாலை மிகவும் மோசமடைந்து பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. டவுன் தொண்டர் சன்னதி, கோடீஸ்வரன் நகர், பாளையங்கோட்டை அண்ணாநகர், கொக்கிரகுளம், சந்திப்பு, தெற்கு பாலபாக்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடந்தது.
மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,480 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,405 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அந்த அணையின் நீர்மட்டம் 135.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 135.43 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 80 அடியாகவும், கொடுமுடியாறு அணை 50.50 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 16.65 அடியாகவும், நம்பியாறு அணை 10.23 அடியாகவும் உள்ளது.
குறுக்குத்துறை
தொடர் மழை மற்றும் பாபநாசம், கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வருவதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி செல்கிறது. ஏற்கனவே, குறுக்குத்துறை முருகன் கோவிலில் உள்ள சாமி மேல கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இருந்தாலும் கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, மழையால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து மின்சார கம்பங்கள் மற்றும் சாலைகளில் விழுந்தது. இதை தீயணைப்பு வீரர்களும், மின்வாரிய ஊழியர்களும் விரைந்து சென்று அப்புறப்படுத்தினார்கள். பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்தனர்.
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாளையங்கோட்டை-75, ராதாபுரம்-21, மூலைக்கரைப்பட்டி-67, சேரன்மாதேவி-30, கொடுமுடியாறு-65, சேர்வலாறு-38, பாபநாசம்-42, மணிமுத்தாறு 33, நெல்லை-58, களக்காடு- 42, நம்பியாறு-39, நாங்குநேரி-51.