ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்த சிறுத்தை
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை கடந்து சென்றது.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூரை அடுத்த தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் அருகே தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை ஒன்று கடந்து துள்ளிக்குதித்து சென்றது. அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த ஒருவர் ரோட்டை கடந்த சிறுத்தையை தன் செல்போன் மூலம் படம் பிடித்தார். சாலையை கடந்த சிறுத்தையால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகளிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.