பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
அம்பையில் பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அம்பை:
அம்பையில் பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு தளர்வில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடங்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து அம்பை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. இதில் அம்பை, சேரன்மாதேவி தாலுகாக்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டன.
ஆவணங்கள் சரிபார்ப்பு
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகவல்லி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், சேரன்மாதேவி கல்வி மாவட்ட அலுவலர் ரெஜினி மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்தனர்.
வாகனங்களின் தகுதிச்சான்று, காப்பீடு போன்ற ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். மேலும் வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி, அவசரவழி, தீயணைக்கும் கருவி, முதலுதவிப்பெட்டி, கொேரானா தடுப்பு விழிப்புணர்வு படங்கள், முக கவசங்கள் போன்றவை உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.
இதில் குறைபாடுடைய வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி, அவற்றை சரி செய்து வருமாறு அறிவுறுத்தினர். உதவி கல்வி அலுவலர் சின்ன சண்முகையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.