மாவட்டத்தில் பரவலாக மழை
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராஜபாளையம்,
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராஜபாைளயம்
ராஜபாளையத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது.
ராஜபாளையம் தென்காசி சாலை, சங்கரன்கோவில் முக்கு, முடங்கியார் சாலை, அம்பழபுளி பஜார், மதுரை ராஜ கடை தெரு, நந்தவன தெரு, முகில் வண்ணம் பிள்ளை, ஆவரம்பட்டி, தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலை, சங்கரன்கோவில் முக்கிலிருந்து ஐ.என்.டி.யு.சி. நகர் வரை உள்ள பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் இன்னும் சரி செய்யப்படாததால் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
ஸ்ரீரெங்கபாளையம் தெருவில் உள்ள வீடுகளில் கழிவுநீர் வெளியேறாமல் மழை பெய்ததும் வீட்டிற்குள் புகுந்தது. ராஜபாளையத்தில் பெய்த மழையால் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஆறாவது மைல் நீர்தேக்கத்திற்கு குடிநீருக்காக ஏற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம் பகுதியை சேர்ந்த ராயப்பன் (வயது 75) என்பவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்தது.
அதேபோல சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ராமானுஜபுரம், கோவிலாங்குளம், காந்திநகர், ஆத்திபட்டி, ராமசாமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.