வேலூர் மாவட்டத்தில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
வேலூர் மாவட்டத்தில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 910 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றன. இந்த முகாம்களில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சத்துவாச்சாரி பகுதியில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டத்தில் 910 முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 1 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் கைவசம் உள்ளது. 2-வது தவணை செலுத்திக் கொள்வோர் 70 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர் அவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை போடாதவர்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள கிராம வாரியாக அவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பஞ்சாயத்துக்களிலும் 3 கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகாக்களிலும் அதிகாரிகளின் மேற்பார்வையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
60 சதவீதம் பேருக்கு...
அதிக தடுப்பூசி செலுத்தும் ஊராட்சிக்கு சான்றுகள் வழங்கப்படும். செவிலியர்கள் நல்ல பங்களிப்போடு பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். வேலூர் மாவட்டத்தில் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனை 65 சதவீதமாக உயர்த்த வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும். மாநகராட்சி பகுதிகளிலும் பணிகள் துவங்கியுள்ளது. ஆகவே அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற முகாம்களில் 35,374 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.