ஊஞ்சல் விளையாடிய சிறுமி கழுத்து இறுகி இறந்த பரிதாபம்
ஊஞ்சல் விளையாடிய சிறுமி கழுத்து இறுகி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணைக்கட்டு
ஊஞ்சல் விளையாடிய சிறுமி கழுத்து இறுகி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணைக்கட்டை அடுத்த வேலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி ரோஜா. இவர்களுக்கு தர்சிகா (வயது 8) என்ற மகள் உள்பட 3 குழந்தைகள் .
கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ரோஜா அவர்களது தாய் வீட்டில் வசித்து வருகிறார். தமிழ்ச்செல்வன் 3 குழந்தைகளையும் அவரது தாயாரிடம் விட்டுவிட்டு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 குழந்தைகளும் வீட்டில் இருந்த ஒரு அறையில் தாயின் சேலையை எடுத்து ஊஞ்சல் கட்டி அதில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
தர்சிகா விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென சேலை அவளது கழுத்தில் இறுக்கியதில் ஊஞ்சலிலேயே மயங்கினாள். வெகுநேரமாகியும் தர்சிகா வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பாட்டி அறைக்குள் சென்று பார்த்த போது ஊஞ்சலில் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து கூச்சலிட்டார்.
அக்கம்பக்கத்தினரை வரவழைத்து தர்சிகாவை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் விரைந்து சென்று தர்சிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.