7-ம் கட்டமாக 618 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டத்தில் 7-ம் கட்டமாக 618 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கரூர்,
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் 7-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று மும்முரமாக நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் 618 இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தடுப்பூசி டோஸ்களும் வரவழைக்கப்பட்டிருந்தன.இந்த முகாம்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்த்து, தடுப்பூசி செலுத்தப்பட்டன. முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.
நொய்யல்
நொய்யல் பெரியார் ஈவேரா அரசு மேல்நிலைப்பள்ளி, சேமங்கி அரசு பள்ளி, நடையனூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம், குந்தாணி பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், மசக்கவுண்டன் புதூர், மூலிமங்கலம், காகிதபுரம், புன்னம்சத்திரம், நடுப்பாளையம், பசுபதிபாளையம், ஆலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டது.
வெள்ளியணை
தான்தோன்றி ஒன்றியம் ஜெகதாபியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட்டு கொள்வதின் அவசியத்தை எடுத்துக்கூறி அச்சத்தை போக்கி தடுப்பூசி போடும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.தடுப்பூசி போடும் பணியில் செவிலியர்களும், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில் சமூக விலகலை உறுதிசெய்தல், முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் குழந்தைகள் நல மைய பணியாளர்களும், சுயஉதவிக்குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணியில் அந்தந்த மையங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
23 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாம்களில் 23 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், முதல் தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 703 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 19 ஆயிரத்து 425 பேரும் செலுத்திக்கொண்டனர். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.
வீடுகளைத்தேடி தடுப்பூசி...
கரூர் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டு வரும் சூழலில், பள்ளப்பட்டி பகுதியில் உள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தாமல் இருப்பதாகவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வராத சூழல் நிலவுவதாகவும் இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில் தெரியவந்தது. அதனடிப்படையில் கலெக்டர் பிரபுசங்கர், பள்ளப்பட்டி பகுதியில் ஹபீப் நகரில் சுமார் 50 வீடுகளுக்கு நேரில் சென்று அங்கிருந்தவர்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சிலர் தங்களுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு நோய் இருப்பதாகவும், சிலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் சில அச்சங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.ஒவ்வொருவரிடத்திலும் உள்ள சந்தேகங்களுக்கும் தானும் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் விடையளித்து, அவர்களின் அச்சத்தைப்போக்கி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைத்தார். அதனைத்தொடர்ந்து தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினையும் நேரில் பார்வையிட்டார்.கலெக்டர் உத்தரவையடுத்து, தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் அதிகளவில் வராத இடங்கள், முகாமிற்கு வருகை தர இயலாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளைத்தேடி தடுப்பூசி செலுத்தும் குழுவினரே நேரில் சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
3 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற முகாம்களில் முதலாவது முகாமில் 61 ஆயிரத்து 724 பேரும், 2-வது முகாமில் 1 லட்சத்து 36 பேரும், 3-வது முகாமில் 50 ஆயிரத்து 113 பேரும், 4-வது முகாமில் 17 ஆயிரத்து 38 பேரும், 5-வது முகாமில் 40 ஆயிரத்து 39 பேரும், 6-வது முகாமில் 50 ஆயிரத்து 113 பேரும், நேற்று நடைபெற்ற 7-வது முகாமில் 23 ஆயிரத்து 128 பேரும் என மொத்தம் 3 லட்சத்து 42 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.