தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
குருபூஜையையொட்டி காரைக்குடியில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர்.;
காரைக்குடி,
குருபூஜையையொட்டி காரைக்குடியில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர்.
குருபூஜை விழா
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும். அன்றைய தினம் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தாண்டிற்கான குருபூஜை விழா நேற்று பசும்பொன் கிராமத்தில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குருபூஜையையொட்டி காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலைக்கு காரைக்குடி அண்ணாநகர், காளையப்பாநகர், ரெயில்வே காலனி, முத்துராமலிங்கத்தேவர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் நேற்று காலை தேவர் சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
பலத்த பாதுகாப்பு
தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், பல்வேறு சமூகத்தினரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சில இளைஞர்கள் கையில் ஜோதி எடுத்து தொடர் ஓட்டமாக தேவர் சிலைக்கு வந்து தேவரை வழிபாடு செய்த பின்னர் அந்த ஜோதியை கையில் எடுத்தபடி பசும்பொன் கிராமத்திற்கு தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்றனர்.
இதேபோல் திருக்கோஷ்டியூரில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மானாமதுரையில் உள்ள தேவர் சிலைக்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். குருபூஜையை முன்னிட்டு காரைக்குடி நகர் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.