தூத்துக்குடியில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை; கனிமொழி எம்.பி. பேட்டி

தூத்துக்குடியில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2021-10-30 17:39 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் மின் மோட்டார்கள் மூலம் மழை நீரை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று கனிமொழி எம்.பி., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வநாயகபுரம், குறிஞ்சி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, செயின்ட்மேரிஸ் காலனி, லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீரை மின்மோட்டார் மூலம் அகற்றும் பணியை பார்வையிட்டனர். மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் தண்ணீரை அகற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு எதிர்பாராத வகையில் நேற்று மட்டும் ஓட்டப்பிடாரம், காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த மழை நீரை அகற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாநகராட்சியில் 200 மின் மோட்டார்கள் தயாராக உள்ளது. தற்போது 50 இடங்களில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் 17 இடங்களில் மழை நீரை வெளியேற்றும் மோட்டார் அறைகள் கட்டப்பட்டு அதன் மூலமாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் மழையின் காரணமாக சாலையில் செல்லும்போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்கள் அவர்களை பத்திரமாக அழைத்து சென்று திரும்பி வர வேண்டும். வரும் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது சண்முகையா எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ,  செயற்பொறியாளர் சுரேஷ் ரூபன், உதவி செயற்பொறியாளர் சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்