கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 2 வட்ட சாலைகள் அமைக்க நடவடிக்கை அமைச்சர் ஏ வ வேலு தகவல்

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 2 வட்ட சாலைகள் அமைப்பதற்கு தி்ட்ட அறிக்கை தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஏ வ வேலு கூறினார்

Update: 2021-10-30 17:24 GMT
கள்ளக்குறிச்சி

ஆய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம்.கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் அலுவலர் விஜய்பாபு வரவேற்றார். 
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கலந்து கொண்டு 97 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

நடவடிக்கை எடுப்பேன்

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளதால் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் விரைந்து முடித்திட வேண்டும்.
கள்ளக்குறிச்சி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2 வட்ட சாலை அமைக்க அதிகாரிகளிடம் திட்ட அறிக்கை தயார் செய்ய கூறியுள்ளேன். அதேபோல் தியாகதுருகம், அடரி, வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி செல்ல சாலை அமைக்க விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். புதிய மாவட்டம் என்பதால் அதிகாரிகள் என்ன தேவை என்பதை சொன்னால் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

பட்டா மாற்றம்

மக்கள் கொடுக்கும் பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக திருத்தம் செய்யவேண்டும். முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி கொடுக்கும் மனு மீதும் உடனடி தீர்வு காண வேண்டும். குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். 
ஒன்றியக்குழு தலைவர்கள் எந்த கிராமத்துக்கு சாலை வசதி தேவை என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கலெக்டரிடம் கொடுக்க வேண்டும். வனத்துறை அதிகாரிகள் கல்வராயன் மலையில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சாலை அமைக்கவும், மின்கம்பம் நடுவதற்கும், அதேபோல் தியாகதுருகம் பகுதியிலுள்ள வனத்துறைக்கு சொந்தமான வழியாக சாலை அமைக்கவும், விரிவு படுத்தவும் ஒத்துழைப்பு தர வேண்டும். 

ரேஷன்கடைகளில் ஆய்வு

அனைத்து துறை அலுவலர்களும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் தெரியப்படுத்த வேண்டும். சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்ற மனு கொடுத்தால் மின்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு உரிய பொருட்கள் வழங்கப்படுகிறதா? என மாவட்ட வருவாய் அலுவலர் ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் மனுக்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மக்கள் தொண்டு செய்வதில் சமூக அக்கறை இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், துணை தலைவர் தங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஒன்றியக் குழு தலைவர்கள் அலமேலு ஆறுமுகம், திலகவதி நாகராஜன், சத்தியமூர்த்தி, சந்திரன், அஞ்சலாட்சி அரசகுமார், வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், தாமோதரன், ராஜவேல், ஒன்றியக்குழு துணை தலைவர் விமலாமுருகன், ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் மணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்