அதிகபட்சமாக வல்லத்தில் 175 மி.மீ. பதிவானது

விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வல்லத்தில் 175 மி.மீ. பதிவானது.

Update: 2021-10-30 17:21 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு வரை விட்டு விட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் கொட்டித்தீர்த்தது. இந்த மழை நள்ளிரவிலும் நீடித்தது. இரவு 11 மணி முதல் பயங்கர இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. அதன் பின்னரும் விடிய, விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது கனமழையாகவும் வெளுத்து வாங்கியது.

தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. மேலும் பலத்த மழையினால் கிராமப்புறங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதேபோல் திண்டிவனம், செஞ்சி, வல்லம், மேல்மலையனூர், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது.
இந்த மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளது. அதுபோல் வீடூர் அணையின் நீர்மட்டமும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தீப்பிடித்து எரிந்த வீடு 

மின்னல் தாக்கியதில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்த தீர்த்தமலை என்பவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டி.வி., துணி மணிகள், மொபட் உள்ளிட்டவைகள் எரிந்து் நாசமானது. 
மின்னல் தாக்கியதில் செஞ்சியை அடுத்த கெங்கவரத்தை சேர்ந்த முருகன் என்பவர் வளர்த்து வந்த மாடு, கன்றுகுட்டி பரிதாபமாக இறந்தது. 
காற்று மற்றும் கனமழையால் திண்டிவனம் அருகே மேல்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இந்த மின்கம்பியில் சிக்கி மாடு, நாய் செத்தது.
 
மழை அளவு

மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 175 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வல்லம்- 175
திண்டிவனம்- 127
செஞ்சி- 100.20
வளத்தி- 98.80
அவலூர்பேட்டை- 98
அனந்தபுரம்- 91
செம்மேடு- 89
வானூர்- 87
கஞ்சனூர்- 81
மரக்காணம்- 71
நேமூர்- 69
விழுப்புரம்- 63
முண்டியம்பாக்கம்- 60
சூரப்பட்டு- 58
கோலியனூர்- 57
முகையூர்- 54
வளவனூர்- 49
கெடார்- 46
மணம்பூண்டி- 41
திருவெண்ணெய்நல்லூர்- 37
அரசூர்- 16.50

மேலும் செய்திகள்