தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் வசதி வேண்டும்
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் பகுதியில் தேரடிபிள்ளையார்கோவில்தெரு உள்ளது. இந்த தெருவில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் தெருவில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுகள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேரடிபிள்ளையார் கோவில் தெருவில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்பதே அந்தபகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், கீழ்வேளூர்.
சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை அடுத்த வண்டாம்பாளை பகுதியில் சிவம்நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுகள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட் அதிகாரிகள் சிவம்நகர் பகுதியில் சாலை வசதி செய்து தரவும், தெருவிளக்கு அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதிமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், வண்டாம்பாளை.
குளம்போல் தேங்கிய மழைநீர்
திருவாரூர் மாவட்டம் ராமநாதன் நகர் சித்திரை தெரு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொள்கின்றன. மேலும், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுகின்றன. அதுமட்டுமின்றி மழைநீரில் அடித்து வரும் விஷப்பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுவதால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வடிகால் வசதி இல்லாமல் சாலையிலும் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி ராமநாதன் நகர் சித்திரை தெருவில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-ராஜசேகரன், திருவாரூர்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையின் நடுவே கூட்டமாக படுத்துக்கொள்கின்றனர். இதனை அறியாமல் சாலையில் வேகமாக வரும் கார், இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-சரவணகுமார்முருகையன், முத்துப்பேட்டை.