போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்
ஐம்பொன் சிலைகள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தேனி:
தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் கடந்த 26-ந்தேதி 9 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சிலைகளை கொள்ளையடித்த பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஸ்ரீதரை (வயது 24) கடந்த 27-ந்தேதி போலீசார் கைது செய்தனர்.
கொள்ளைபோன 9 சிலைகளும் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் ஸ்ரீதரின் கூட்டாளியான பெரியகுளம் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்ட கார்த்திக், தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை வருகிற 3-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து பெரியகுளம் கிளை சிறையில் கார்த்திக் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திக், ஸ்ரீதர் இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.