கடலூா் மாவட்டம் முழுவதும் பலத்த மழை அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 16 செ.மீ. பதிவு
கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
கடலூர்,
தமிழகத்தில் கடந்த 25-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதற்கிடையே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவி வருவதால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாது நள்ளிரவு வரை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.
தரைப்பாலம் மூழ்கடிப்பு
மேலும் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதில் பரங்கிப்பேட்டை பகுதியில் தாழ்வான இடங்களில் இருந்த சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்த மக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு தூக்கத்தை தொலைத்து, வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர இடைவிடாது பெய்த கனமழையால் தென்பெண்ணையாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.
இதனால் அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு மத்தியில் தரைப்பாலத்தை கடந்து சென்றனர். மேலும் இளைஞர்கள் சிலர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது.
16.8 செ.மீ. மழை
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 16.8 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக கீழ்செருவாயில் 0.4 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பிற இடங்களில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலூர் - 81.1
கொத்தவாச்சேரி - 79
வடக்குத்து - 73
குறிஞ்சிப்பாடி- 63
பண்ருட்டி- 60
குடிதாங்கி- 50
வானமாதேவி - 42
புவனகிரி- 30
ஸ்ரீமுஷ்ணம்- 17.2
வேப்பூர்- 17
அண்ணாமலைநகர்- 16.4
சேத்தியாத்தோப்பு- 15.4
காட்டுமன்னார்கோவில்- 14
சிதம்பரம்- 12.4
லால்பேட்டை- 10.1
விருத்தாசலம்- 10
தொழுதூர்- 5