ஆஸ்பத்திரிகள், வழிபாட்டு தலங்களின் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது பொதுமக்களுக்கு கலெக்டர் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் ஆஸ்பத்திரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது என பொதுமக்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-30 16:45 GMT
கடலூர், 

இதுதொடர்பாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர் மாவட்டத்தில் வெடிபொருட்களை உரிமம் இன்றி விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது. உரிமம் வழங்கப்பட்ட அளவுக்கு மிகாமல் வெடிபொருட்களை இருப்பு வைக்க வேண்டும். தயார் செய்யப்பட்ட வெடிபொருட்களை அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

பட்டாசுகளை வைக்க உரிமம் பெற்ற இடங்களில் மின்வயர்கள் மற்றும் மின் இணைப்புகள் வெளியில் தொங்காமலும், பழுதின்றியும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

மேலும் தீயணைப்புத் துறையால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி தீத்தடுப்பு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், பயன்படுத்தக்கூடிய நிலையில் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெடி பொருட்கள் வைத்திருக்கும் இடங்களின் அருகில் எரிவாயு சிலிண்டர்கள் சேகரித்து வைத்தல், தீவிபத்து ஏற்படுத்தக் கூடிய காரணிகள் ஏதும் அருகில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், கட்டாயம் புகைபிடிக்கக் கூடாது.

குடிசைப்பகுதி

மேலும் ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படவேண்டிய இடங்களின் அருகில் பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

அரசால்அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். குடிசைப்பகுதி மற்றும் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில், இந்நிலை தொடர பொதுமக்கள் பண்டிகையை முன்னிட்டு கடைகள், கோவில்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவதுடன், கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் பட்டாசு விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்