தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-30 16:38 GMT
உடனடி நடவடிக்கை
சேலம் தாதகாப்பட்டி உழவர்சந்தை பகுதியில் உள்ள சண்முகநகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறி தேங்கி நிற்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துவிட்டது.இதன்காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று கடந்த 28-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயின் அடைப்புகள் சரிசெய்யப்பட்டன. இதனால் ‘தினத்தந்தி’க்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்.
-ஊர்மக்கள், தாதகாப்பட்டி, சேலம்.
சேலம் நெடுஞ்சாலை நகர் வைகை தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இங்கு குப்பைத்தொட்டி இல்லாத காரணத்தால் மக்கள் திறந்த வெளியில் குப்பையை கொட்டுகின்றனர். தினசரி வரும் குப்பை வண்டியும் முறையாக வராத காரணத்தால் இங்கு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது என்று கடந்த 29-ந் தேதி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து குப்பைகள் உடனடியாக அள்ளப்பட்டன. குறையை வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
-கே.மதன்குமார், காசக்காரனூர், சேலம்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி கிழக்கு ஈஸ்வரன் கோவில் வடக்கு பகுதியில் வசிஷ்டநதி உள்ளது. இதன் அருகே மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி விளையாட்டு மைதானம் அல்லது வாரச்சந்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கா.முரளி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.
சேலம் கோரிமேடு-குருவம்பட்டி சாலையில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. மேலும் நகராட்சி குப்பை வண்டிகளை இங்கு வரிசையில் நிறுத்தி வைத்து குப்பைகளை வேறு வண்டிகளில் ஏற்றி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் மூச்சுகூட விட முடியவில்லை. நோய் பரவும் அபாயம் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக குப்பைகளை அள்ளி சுத்தம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனி, குருவம்பட்டி, சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் மாநகராட்சி குகை சங்கீதா தியேட்டர் சாலை 7-வது புலிகுத்தி தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துவிட்டது. மழைக்காலங்களில் விஷப்பூச்சிகளும் நடமாடுகின்றன. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரிசெய்யவேண்டும்.
-சந்தோஷ் கிரி, குகை, சேலம்.
விஷப்பூச்சிகள் நடமாட்டம்
சேலம் மாநகராட்சி 22-வது வார்டு சிவதாபுரம் அம்மன் நகர் குடியிருப்பு பகுதிகளில், ஏரி நீர் புகுந்து சாக்கடையோடு கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. மேலும் கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் சூழ்நிலை உருவாகிஉள்ளது. மேலும் குடிநீருடன், கழிவு நீரும் கலந்து வருகிறது. பலவித நோய்கள் பெருகி சுகாதார சீர்கேடு நிலவுவதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு, வீடுகளை சுற்றி பெருமளவு தேங்கியுள்ள சாக்கடையோடு கலந்த ஏரி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அசோகன், அம்மன் நகர், சேலம்.
மின்விளக்கு அமைத்து தரப்படுமா?
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் கட்டி நாயக்கன்பட்டி-எம்.ஜி.ஆர். நகர் செல்லும் வழியில் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றோம். பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் அந்த வழியில் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் அச்சத்துடனே கடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே அந்த சாலையில் உள்ள மின்கம்பங்களில் மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என்பது ஊர் பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், ஆவடத்தூர், சேலம்.
குளம்போல் தேங்கும் மழைநீர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வேளாளர் காலனி முதல் தெருவில் மழைக்காலம் என்பதால் போதிய வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்ற வடிகால் வசதி செய்து தரவேண்டும்.
-ஊர்மக்கள், வேளாளர் காலனி, நாமக்கல்.
தெருநாய்கள் தொல்லை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா தோக்கவாடி பஞ்சாயத்து ஸ்ரீஅம்பாள் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் தெருநாய்கள் சண்டையிட்டு குரைப்பதால் மக்கள் நிம்மதியாக வீடுகளில் தூங்ககூட முடிவதில்லை. மேலும் தெருநாய்களுக்கு வெறிபிடித்து இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பயத்தோடு இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து சென்றால் பொதுமக்களின் அச்சத்தை தவிர்க்கலாம்.
-இப்ராகிம், ஸ்ரீஅம்பாள் நகர், நாமக்கல்.
சேறும், சகதியுமான சாலை
சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டணம் கோ.மு.நகர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை நடுவே குழிகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
-மோ.கலைவாணன், கோ.மு.நகர், சேலம்.

மேலும் செய்திகள்