பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-30 16:16 GMT
திண்டுக்கல்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமணி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நிர்வாகிகள் கோஷமிட்டனர்.
நத்தம், வடமதுரை
இதேபோல் பழனி நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பஸ்நிலைய ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கவுசல்யா தலைமை தாங்கினார். இதில், பொருளாளர் ஈஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர் தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு தள்ளுவண்டியில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பை பயன்படுத்துவது போன்றும் வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நத்தத்தில் தாலுகா (பொறுப்பு) செயலாளர் வினோத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சாணார்பட்டி தாலுகா செயலாளர் ராமர், நத்தம் தாலுகா குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, நதியா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
வடமதுரை 3 சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராசு, சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்