திண்டுக்கல், தேனியில் தீபாவளி பண்டிகைக்கு 300 சிறப்பு பஸ்கள்
தீபாவளி பண்டிகைக்கு திண்டுக்கல், தேனியில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல்:
தீபாவளி பண்டிகைக்கு திண்டுக்கல், தேனியில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை என்றாலும், அதற்கடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகியவை விடுமுறை தினங்கள் ஆகும். இதனால் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்து கொண்டு, தீபாவளி பண்டிகையை 4 நாட்கள் கொண்டாட பலர் முடிவு செய்து இருப்பார்கள்.
மேலும் தீபாவளி பண்டிகையை வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்றும் பலர் கொண்டாடுவார்கள். இதேபோல் தீபாவளி விடுமுறைக்கு ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வோரும் உண்டு. இவ்வாறு வெளியூர் செல்லும் மக்கள் சிரமம் இல்லாமல் சென்று வரும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
300 சிறப்பு பஸ்கள்
அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வெளியூர்களுக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காக 2 மாவட்டங்களில் இருந்தும் சென்னை, கோவை, சேலம், திருப்பூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதேபோல் வெளியூர் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு 7-ந்தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல், தேனியில் மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் பொதுமக்களின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்களை இயக்கவும் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். எனவே மக்களின் கூட்டத்தை கண்காணிக்கவும், அவர்களின் பயணத்துக்கு உதவி செய்யவும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் முக்கிய பஸ் நிலையங்களில் வழிகாட்டி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.