ரெயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஆண் பிணம்
பழனி ரெயில்வே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
பழனி:
பழனி இந்திராநகர் ரெயில்வே கேட் அருகே, தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் துண்டான நிலையில் கிடப்பதாக பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது தண்டவாளத்தில் உடல், கால், கை என தனித்தனியாக துண்டான நிலையில் ஆண் பிணம் சிதறி கிடந்தது. அருகில் நீலம்-வெள்ளை நிற கைலி, ஊதா நிற சட்டை கிடந்தது. ஆனால் உடல் முழுவதும் சேறும், சகதியும் இருந்தது.
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.