முன்னேற்பாடு பணிகளை வட்டார கல்வி அதிகாரி ஆய்வு
முன்னேற்பாடு பணிகளை வட்டார கல்வி அதிகாரி ஆய்வு
வால்பாறை
வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி வட்டார கல்வி அதிகாரி பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதையொட்டி வால்பாறை வட்டார பகுதியில் 85 அரசு பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் வால்பாறை வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இறுதிக்கட்ட ஆய்வு
இந்த இறுதிக்கட்ட ஆய்வில் பள்ளியில் கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணித்தார். பின்னர் வகுப்பறையில் எவ்வாறு மாணவ- மாணவிகளை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் என்பதை மாணவிகளை கொண்டு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர் குடிதண்ணீர் வசதி, சுகாதாரமான முறையில் கழிப்பிடங்கள் உள்ளதா, வகுப்பறைகளுக்கு வரக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கான முகக்கவசம் இருப்பில் உள்ளதா, கைகழுவும் திரவம், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் ெதர்மல் ஸ்கேனர் தயார் நிலையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். சத்துணவு மையங்கள் சுகாதாரமான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து சத்துணவு சமைக்கும் பாத்திரங்கள் சுத்தமாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவ- மாணவிகளை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும் என்று வட்டார கல்வி அலுவலர் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவரை வழங்கினார்.