காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 7-வது மெகா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தடுப்பூசி முகாம்கள் நடத்த மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் தடுப்பூசி செலுத்துவதற்காக நர்சுகள், தகவல்களை பதிவிட தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்துவர சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சி துறை, வருவாய்த்துறையை சேர்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.
இந்த கொரோனா தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் போட்டுக்கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும்.
கொரோனாவை தடுப்பதற்கு நம் கையில் உள்ள ஆயுதம் தடுப்பூசியே ஆகும். குறிப்பாக ரத்த அழுத்தம், சக்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. இந்த மெகா தடுப்பூசி முகாமில் அனைவரும் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.