‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-30 04:15 GMT
கோவில் குளம் தூய்மையானது; பக்தர்கள் பாராட்டு

சென்னை புழல் பகுதியில் உள்ள பழமையான திருமூலநாதர் சிவன் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து ‘தினத்தந்தி‘ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து கோவில் குளத்தில் தூய்மை பணி தொடங்கியது. தற்போது கோவில் குளம் தூய்மையாகி உள்ளது. இதற்காக ‘தினத்தந்தி‘க்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மின்வாரியம் உடனடி நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அன்புநகர் 6-வது குறுக்குத்தெருவில் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் செய்தி ‘தினத்தந்தி‘ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் வைக்கப்பட்டுள்ளது.



பாதாள சாக்கடை கட்டமைப்பு சீரமைப்பு

சென்னை கொளத்தூர் பாலகுமரன் நகர் 2-வது மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை கட்டமைப்பு சாலையை விட உயரமாக அமைக்கப்பட்டு இருப்பதும், அதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதும் குறித்த செய்தி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானதை தொடர்ந்து அந்த பாதாள சாக்கடை கட்டமைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது.



மூடியில்லாத கால்வாய்

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்குட்பட்ட காமராஜபுரம் பெருமாள் கோவில் தெருவில் நீண்ட நாட்களாகவே மூடியே இல்லாமல் ஆபத்தான நிலையில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் முன்பு மூடி பொருத்தப்பட வேண்டும்.

- எஸ்.முருகன், கன்னியம்மன்பேட்டை.




பாதாள சாக்கடை மூடி சேதம்

சென்னை அம்பத்தூர் அபிராமிபுரம் நேதாஜி 2-வது குறுக்குத்தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி ஆங்காங்கே பெயர்ந்து உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- பொதுமக்கள், அம்பத்தூர்.



பள்ளிக்கூடம் முன்பு கழிவுநீர் தேக்கம்

சென்னை மணலி சின்னசேக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்பு கழிநீர் தேங்கி உள்ளது. அதனை கடந்து தான் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் அவலநிலை இருக்கிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

-எஸ்.கோபி, மணலி.



புதிய மின்கம்பம் நிறுவப்படுமா?

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் நகர் 15-வது தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து இருக்கிறது. குறிப்பாக மின்கம்பத்தில் அடிப்பகுதி வளைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நிறுவிட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- கலைஞர் நகர் மக்கள்.

மூடப்படாத பள்ளம்

சென்னை கொரட்டூர் சிவானந்தம் காலனியில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், 2 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்படாததால் கொசுக்கள் உற்பத்தி கூடமாக இருக்கிறது.

- பொதுமக்கள், சிவானந்தம் காலனி.

மின்வயர்களை சூழ்ந்துள்ள செடி-கொடிகள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சி ஞாயிறு கிராமத்தில் அண்ணா தெரு மற்றும் சிவன் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மின்கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மின்சார வயர்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. மேலும் மின்விளக்குகளிலும் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் வெளிச்சம் வருவது இல்லை.




தெருவிளக்கு எரியவில்லை

திருவள்ளூர் மாவட்டம் திருன்றவூர் பிரகாஷ் நகர் 8-வது தெருவில் சிவா விஷ்ணு கோவில் அருகில் ஒரு மாதத்துக்கும் மேலாக தெருவிளக்கு எரியாமலேயே இருக்கிறது. இதனால் மாலை வேளையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் பாம்புகள் நடமாட்டமும் இருக்கிறது. எனவே மக்கள் சிரமம், பயத்தை போக்க தெருவிளக்கு எரிய செய்ய தேவையான நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.

- பொதுமக்கள், பிரகாஷ்நகர்.

கழிவுநீர் தேக்கத்தால் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ராமநாதன் நகர் மு.க.ஸ்டாலின் தெருவில் கழிவுநீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இது போதாதென்று தெருவில் இருக்கும் மின் விளக்கும் 3 மாதங்களுக்கும் மேலாக எரியாமல் இருக்கிறது. இதனால் விளையாடும் குழந்தைகள் கழிவுநீரில் கால் வழுக்கி விழுந்து அடிபட நேரிடுகிறது. இந்த நிலைமை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், பொழிச்சலூர்.

சாலையில் ராட்சத பள்ளங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கிழக்கு ரேவதிபுரம் சாலை ராட்சத பள்ளங்களுடன் காட்சி தருகிறது. இந்த பள்ளங்களில் மழைநீர் சேர்ந்து பெரும் தொல்லையை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்த சாலை சீரமைப்படுமா?

- குணசேகர், ஊரப்பாக்கம்.

மாடுகள் படுத்தும்பாடு

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் நகராட்சி காமராஜபுரம் மெயின் ரோட்டில் ‘பீக் அவர்‘ எனப்படும் பரபரப்பான நேரங்களிலும் மாடுகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது. இதனால் அவசரத்துக்கு அலுவலகம், பள்ளிக்கூடம் செல்லும்போது இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.

-பொதுமக்கள், செம்பாக்கம்.

கொசுக்கள் படையெடுப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட மூன்றாங்கட்டளை கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கழிவுநீர் தேங்கி இருக்கிறது. இதனால் கொசுக்கள் படையெடுத்து நோய்களை பரப்பி வருகின்றன. எனவே கழிவுநீர் கால்வாயில் அடைப்பை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், மூன்றாங்கட்டளை கிராமம்.

கான்கிரீட் வடிகால்வாய் தேவை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோவூர் தண்டலம் கிராமத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்வதற்கான கான்கிரீட் வடி கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனனில் மழைக்காலங்களில் சொல்லொணத் துயரங்களை அனுபவிக்கிறோம்.

- ரவி, தண்டலம்.

மேலும் செய்திகள்