மீனவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்
நலவாரியம் மூலம் மீனவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
நாகர்கோவில்:
நலவாரியம் மூலம் மீனவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
ஓய்வூதியம்
மீனவர் நல வாரியம் மூலம் மீனவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், முதல் கட்டமாக ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளச்சல் நகராட்சியை தவிர்த்து குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களை கிராம பஞ்சாயத்துகளாக மாற்ற வேண்டும்.
ஒகி புயல் மற்றும் சரக்கு பெட்டக மாற்று முனைய திட்டம் போராட்டங்களின்போது மீனவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
நவம்பர் மாதம் 21-ந் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. போராடி பெற்ற உரிமையின் காரணமாக இந்த விழா தற்போது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் உலக மீனவர் தினத்தை உலக மீன்வள தினம் என்று மாற்றியிருக்கிறார்கள். எனவே இதை உலக மீனவர் தினமாக கொண்டாட வேண்டும். மீனவ கிராமங்களில் தங்குதளம் இல்லாத பகுதிகளில் மினி மீன்பிடி துறைமுகங்கள் ஏற்படுத்த வேண்டும்.
எதிர்ப்பு
மத்திய அரசின் மீன்வள மசோதாவுக்கு எங்களது எதிர்ப்புக்களை இந்த மன்றத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மீன்வளத்துறை அதிகாரிகளை எந்த ஒரு விஷயத்துக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கடற்கரை கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை. கன்னியாகுமரியை நகராட்சியாக மாற்றும்பட்சத்தில் அதில் கோவளத்தை இணைக்கக்கூடாது.
தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் விபத்து ஏற்படாத வகையில் துறைமுகத்தை சரிசெய்ய வேண்டும். மீனவர்களுக்கு மாதத்துக்கு 500 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் வழங்க வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கும் மீனவர்களின் கோரிக்கை மனுக்கள் அனைத்துக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து விவாதம் செய்தனர்.
பரிந்துரை
கலெக்டர்:- மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக மீண்டும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் உங்களுடைய கோரிக்கைகள், குறைகள் அனைத்துக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் சார்பில் குறும்பனை பெர்லின், ஆன்றனி, அலெக்சாண்டர், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணியாளர் டன்ஸ்டன், ஜாண் அலோசியஸ், ஜோஸ் பில்பின், லைலா, கெபின்ஷா, தனீஷ், ஜேம்ஸ், ஜாண் மற்றும் பலரும், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், சுகாதாரத்துறை சூரிய நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.