வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
தக்கலை அருகே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.1¾ லட்சம் சிக்கியது. இது தொடர்பாக தற்காலிக ஊழியர் உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
பத்மநாபபுரம்,:
தக்கலை அருகே வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.1¾ லட்சம் சிக்கியது. இது தொடர்பாக தற்காலிக ஊழியர் உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிரடி சோதனை
தக்கலை அருகே கோழிப்போர்விளையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று மதியம் 2.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு பீட்டர் பால் துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி, ரெமா உள்பட போலீசார் வந்தனர்.
அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள ஆன்லைனில் புதிய லைசென்சு எடுக்க விண்ணப்பிக்கும் அலுவலகம், அதை சுற்றியுள்ள கடைகளிலும் திடீர் சோதனை நடத்தினார்கள்.
ரூ.1¾ லட்சம் சிக்கியது
அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சு எடுப்பவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பிரிவில் சோதனை நடத்திய போது, அங்கு இருந்த தற்காலிக ஊழியரிடம் ரூ.3 ஆயிரத்து 200 இருந்தது.
மேலும் அருகில் உள்ள ஆன்லைன் அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக முத்திரைகள் மற்றும் ஆவணங்களும் இருந்தன. இது தொடர்பாக 5 புரோக்கர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்காலிக ஊழியர் உள்பட 6 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து, அவ்வளவு பணம் எப்படி வந்தது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.