திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்- லாரி மோதல்; பயணிகள் உயிர் தப்பினர்
திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்- லாரி மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர்.
தாளவாடி
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திம்பம் மலைப்பாதையில் நேற்று மதியம் 12 மணி அளவில் 22-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு சோள பாரம் ஏற்றி சென்ற லாரியும், பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. விபத்து ஏற்பட்டதும், பஸ்சில் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். எனினும் பஸ் சேதம் அடைந்தது. விபத்து ஏற்பட்டதும், லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரி மற்றும் பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 1 மணி அளவில் பஸ்சும், லாரியும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.