தென்காசியில் தொடர் மழை; கருப்பாநதி அணை நிரம்பியது
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கருப்பாநதி அணை நிரம்பியது.;
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், கருப்பாநதி அணை நிரம்பியது. குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தொடர் மழை
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. சில இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை கொட்டியது.
செங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் நகர மற்றும் கிராமப்பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
கருப்பாநதி அணை நிரம்பியது
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனா நதி 82.40 அடியாகவும், ராமநதி 74 அடியாகவும், அடவிநயினார் அணை 127 அடியாகவும் உள்ளது.
72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணைப்பகுதியில் பெய்த மழை காரணமாக, அந்த அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வருகின்ற 100 கன அடி தண்ணீர் அப்படியே உபரிநீராக மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அந்த அணைக்கு வருகின்ற 10 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
குற்றாலம் அருவி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் தண்ணீர் சீறிப்பாய்ந்து பாதுகாப்பு வளைவின் மீது கொட்டுகிறது. ஐந்தருவியில் தண்ணீர் சற்று அதிகரித்து வருகிறது.
இந்த மழை தொடர்ந்து நீடித்தால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீடித்து வருவதால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மழை அளவு
தென்காசி மாவட்டத்தில்நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அடவிநயினார்-70, ஆய்க்குடி-41, தென்காசி-22, செங்கோட்டை-16, குண்டாறு-14, கருப்பாநதி- 13, கடனாநதி, ராமநதி-10, சங்கரன்கோவில்-9, சிவகிரி-2.