பெங்களூரு சுதந்திர பூங்கா உள்பட முக்கிய பகுதிகளில் பிரமாண்ட போராட்டம் நடத்த தடை - கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு சுதந்திர பூங்கா உள்பட முக்கிய பகுதிகளில் பிரமாண்ட போராட்டம் நடத்த தடை விதித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-10-29 21:01 GMT
பெங்களூரு:

பிரமாண்ட போராட்டத்திற்கு தடை

  பெங்களூரு சுதந்திர பூங்கா, பன்னப்பா பூங்கா, டவுன்ஹால், மைசூரு வங்கி சர்க்கிள், அனந்தராவ் சர்க்கிள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் நடத்த அனைத்து தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்காவுக்கும், சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்காவுக்கும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பிரமாண்ட ஊர்வலம் நடத்துவது வழக்கம்.

  இவ்வாறு ஊர்வலம், போராட்டம் நடத்தும் போது நகரின் முக்கிய பகுதியான மெஜஸ்டிக், விதானசவுதா, அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் முக்கிய பகுதிகளில் பிரமாண்ட போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

500-க்கும் குறைவான நபர்கள்...

  அதாவது நகரில் முக்கிய பகுதிகளில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரில் பிரமாண்ட போராட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என்று கர்நாடக அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று பெங்களூருவில் முக்கிய பகுதிகளில் போராட்டம் நடத்த தடை விதித்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

  அதன்படி, சுதந்திர பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் குறைவான நபர்கள் கலந்து கொள்ளும் போராட்டங்களை நடத்தி கொள்ளலாம். 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் போராட்டமாக இருந்தால், பெங்களூரு அருகே துமகூரு ரோடு, 10-வது மைல் பகுதியில் இருக்கும் சர்வதேச கண்காட்சி மையத்தில் தான் நடத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசின் உத்தரவை மீறி நகரில் முக்கிய பகுதியில் போராட்டம் நடத்தினால், போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்