வேறு சாதி வாலிபருடன் காதல்: இளம்பெண் ஆணவ கொலை - தந்தை கைது
பீரூர் அருகே வேறு சாதி வாலிபருடனான காதலை கைவிட மறுத்ததால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை ஆணவ கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.;
சிக்கமகளூரு:
வேறு சாதி வாலிபரை...
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா கென்சேகொண்டன ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரப்பா. இவரது மகள் ராதா(வயது 18). இவர், அதேப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.யு.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ராதாவுக்கு, அதேப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் உயிருக்கு, உயிராக காதலித்து வந்தனர். இதில் ராதா காதலித்த வாலிபர் வேறொரு சாதியை சேர்ந்தவர் என்று தெரிகிறது. இவர்களது காதல் சந்திரப்பாவுக்கு தெரியவந்தது.
காதலுக்கு எதிர்ப்பு
இதையடுத்து சந்திரப்பா, மகள் ராதாவிடம் வேறோரு ஜாதியை சேர்ந்த வாலிபரை காதலிப்பதை கைவிடும்படி கண்டித்துள்ளார். அதற்கு ராதா செவிசாய்க்காமல் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு சித்ரதுர்கா மாவட்டம் சன்னகிரி அருகே உள்ள மல்லிகெரே கிராமத்தில் தனது சகோதரி வீட்டிற்கு ராதாவை அழைத்து சென்று சந்திரப்பா விட்டார். அப்போது சந்திரப்பாவின் சகோதரி, ராதாவிடம் காதலை கைவிடும்படி புத்திமதி கூறியுள்ளார். ஆனாலும் ராதா மனம் மாறவில்லை.
இளம்பெண் ஆணவ கொலை
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சந்திரப்பா மோட்டார் சைக்கிளில் சகோதரி வீட்டிற்கு வந்து ராதாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சன்னகிரி-பீரூர் சாலையில் ரெயில்வே கேட் அருகே திடீரென சந்திரப்பா மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாலிபருடனான காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு ராதா என்னால் அவருடனான காதலை கைவிடமுடியாது. நான், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்துள்ளார். பலமுறை கூறியும் கேட்காததால் சந்திரப்பா மகளை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி அவர், அருகே இருந்த புதர் பகுதிக்கு ராதாவை இழுத்து சென்று அவருடைய துப்பட்டாவை எடுத்து மகள் என்று பாராமல் ராதாவை கழுத்தை நெரித்து ஆணவ கொலை செய்தார். பின்னர் ராதாவின் உடலை அங்கிருந்த ஒரு குழியில் வீசிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டு வந்தார். வீட்டுக்கு வந்ததும் உள்ளே இருந்த மகனிடம் வாலிபருடனான காதலை கைவிட மறுத்ததால் ராதாவை கொன்றுவிட்டதாக தெரிவித்தார். மேலும் பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்து தனது மகளை கொலை செய்து விட்டதாக அழுதபடி கூறியுள்ளார்.
தந்தை கைது
இதைக்கேட்டு மகன், அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், பீரூர் போலீசுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து சந்திரப்பாவிடம் விசாரணை நடத்தினர். அதில் மகள் வேறொரு சாதி வாலிபருடனான காதலை கைவிட மறுத்ததால் சந்திரப்பா துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று உடலை குழியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திரப்பாவை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராதாவின் உடலை கைப்பற்றி பீரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த ஆணவ கொலை தொடர்பாக பீரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.