கூடுதலாக 237.36 மில்லி மீட்டர் மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதலாக 237.36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கியதால், அவை நிரம்பி வருகின்றன. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் விட்டு, விட்டு லேசான மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்போதும், வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பியவர்களும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். சிலர் குடை பிடித்தபடி சென்றதை காணமுடிந்தது. பகல் நேரத்தில் வெயில் அடிக்காமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய மழையளவு 568 மி.மீ. ஆனால் பெய்த மழையளவு 805.36 மி.மீ. ஆகும். இதன்படி கூடுதலாக 237.36 மி.மீ. மழை பெய்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.