சின்ன வெங்காயத்தை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்
சின்ன வெங்காயத்தை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
பெரம்பலூர்:
கூட்டுறவு வங்கிகளுக்கு அதிக உரம்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் விவசாயி ஜெயராமன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, கூட்டுறவு வங்கிகளுக்கு அதிக அளவு உரங்கள் ஒதுக்க வேண்டும், என்றார். விவசாயி ராஜூ பேசுகையில், கை.களத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும். பெரம்பலூர் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடம் சரியாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
விவசாயி மணி பேசுகையில், பொம்மனப்பாடி பகுதியில் பயிர்களை அழித்து வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். சின்ன வெங்காய பயிரை தாக்கி வரும் திருகல் நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும், என்றார். விவசாயி வரதராஜன் பேசுகையில், மாவட்டத்தில் தேனீ, மீன் வளர்ப்பு முறையை ஊக்கப்படுத்த வேண்டும், என்றார். விவசாயி ராமலிங்கம் பேசுகையில், ஆண்டுதோறும் மாவட்டத்தில் ஏற்படும் உரத்தட்டுப்பாட்டை முன்கூட்டியே ஆய்வு நடத்தி கண்டறிந்து தீர்க்க வேண்டும். எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வெளியே உள்ள நுழைவு வாயிலில் இருந்து உள்ளே உள்ள நுழைவு வாயில் வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், என்றார். விவசாயி ராமராஜ் பேசுகையில், மாவட்டத்தில் கூடுதலாக தடுப்பணை கட்ட வேண்டும். சின்ன வெங்காய விவசாயிகளுக்கு இலவசமாக கொட்டகை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
படைப்புழு தாக்குதல்
விவசாயி செல்லத்துரை பேசுகையில், மாவட்டத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை தடுக்க அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து, சின்ன வெங்காயம் கிடைக்காத பகுதிகளுக்கும், ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும். மக்காச்சோள பயிர் மீண்டும் படைப்புழு தாக்குதலுக்கு ஆளாகி வருவதால், டிரோன் மூலம் மருந்து தெளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயி நீலகண்டன் பேசுகையில், யூரியா உரம் போதிய அளவு கையிருப்பில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டால், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். கரும்பு வெட்டுவதற்கு கூலி அதிகமாகவதால், கரும்பு வெட்டுவதற்கு அறுவடை எந்திரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
விவசாயி ராஜேந்திரன் பேசுகையில், கரும்பு விவசாயிகளுக்கு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகையை அரசு வழங்க வேண்டும், என்றார். விவசாயி ரமேஷ் பேசுகையில், செயற்கை உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். விவசாயி முருகேசன் பேசுகையில், வங்கிகளில் விவசாயிகளுக்கு விவசாய கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளத்திற்கு நேரடி கொள்முதல் நிலையம், நடமாடும் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தித்தர வேண்டும், என்றார்.
விவசாய வேலையில் தொழிலாளர்கள்
பெண் விவசாயி கார்த்திகா பேசுகையில், 100 நாள் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களை விவசாய வேலையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளம், பருத்தியை தாக்கி வரும் குருத்து பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். நூத்தப்பூர் ஊராட்சியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி, இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) கருணாநிதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயியை வெளியே அனுப்பிய அதிகாரி
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அரசு உயர் அதிகாரிகள் வர தாமதம் ஆனதால், முக்கால் மணி நேரம் தாமதமாகவே கூட்டம் தொடங்கியது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகளில் ஒருவர் லுங்கி அணிந்து வந்திருந்தார். இதனை கண்ட வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் அந்த விவசாயியை கூட்டத்தில் பங்கேற்க வேட்டி அணிந்து வர வேண்டும் என்று கூறி, அவரை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பியதால், அந்த விவசாயி மன வேதனை அடைந்தார். இதையடுத்து அரசு அதிகாரி ஒருவர் அந்த விவசாயியிடம் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அடுத்த முறை வரும்போது வேட்டி அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் அந்த விவசாயி கூட்டத்தில் கலந்து கொண்டார்.