நெல்லையில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்- கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லையில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.

Update: 2021-10-29 20:29 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டு காலமாக நடைபெறவில்லை. கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து நேற்று, நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், வேளாண்மை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய திட்டம்

கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இதுவரை இந்த ஆண்டு 70.23 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. நடப்பு பிசான பருவத்திற்கு தேவையான விதைகள், உரம் மற்றும் உயிர் உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரங்கள் விவசாயிகளுக்கு மட்டும் மானிய விலையில் கிடைக்க ஏதுவாக பி.ஒ.எஸ். எந்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வளர்ச்சி உருவாக்கிட விவசாயிகள் நலன் சார்ந்த துறைகளான வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டத்தை நெல்லை மாவட்டத்தில் உள்ள 63 கிராம பஞ்சாயத்துகளில் செலுத்தப்பட உள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 15-ந் தேதி கடைசி நாளாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பயிர் காப்பீடு

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், “ஏற்கனவே பயிர் காப்பீடு செய்த எங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை” என்றனர். அதற்கு கலெக்டர், “பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசுகையில், “நெல்லை மாவட்டத்தில் அனைத்து அணைகளிலும் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால் ஒரு மடையிலும் ஷட்டர் சரியில்லை. விவசாயிகள் சாக்கு வைத்து அடைத்துள்ளனர். கால்வாய்கள் பராமரிப்பில்லாத அவலம் தொடருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்” என்றார்.

நெல் கொள்முதல் நிலையம்

முன்னீர்பள்ளம் விவசாய சங்க தலைவர் பாலையா பேசுகையில், “நெல் கொள்முதல் நிலையங்களில் அடங்கல் இல்லாமல் நெல் விற்பனை செய்யமுடியாது. இதனால் குத்தகை விவசாயிகள், நெல்லை தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறுவடை தொடங்கிய உடனே நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும்” என்றார்.
திசையன்விளை பகுதிக்கு நம்பியாற்றில் தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என்று விவசாயி ஒருவர் கூறினார்.
இதற்கு கலெக்டர், “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்