கீரனூர்
சென்னையை சேர்ந்த நண்பர்கள் 7 பேர் ஒரு காரில் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை இனியன் என்பவர் ஓட்டினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே இளையாவயல் புறவழிச் சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் வேகமாக இறங்கியது. அப்போது அந்த கார் மழைநீரில் கால்வாசி அளவு சிக்கிக் கொண்டது. சாலையை விட்டு பள்ளத்தில் கார் வேகமாக இறங்கியதில் அதன் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில், காரில் இருந்த சென்னை பழஞ்சூர் பகுதியை சேர்ந்த சிவா, அஜித், அசோக்குமார், சிலம்பரசன், பூந்தமல்லியை சேர்ந்த மதன்பாப்பன், சத்திரத்தை சேர்ந்த நவீன் மற்றும் காரை ஓட்டி வந்த இனியன் ஆகிய 7 பேர் காயமடைந்தனர். இதனை கண்டதும் அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.