டாஸ்மாக்கடை பூட்டை உடைத்து திருட்டு

கரூரில் நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் மேற்கூரையை பிரித்து மதுபானங்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2021-10-29 18:35 GMT
கரூர்
டாஸ்மாக் கடை
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் காட்டுப் பகுதியில் 4915 என்ற எண் கொண்ட டாஸ்மாக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக செல்வகுமார் என்பவரும், 2 விற்பனையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணியை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு விற்பனையாளர்கள் சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக விற்பனையாளர்கள் வந்துள்ளனர். அப்போது டாஸ்மாக் கடையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை  சேதமடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மதுபானங்கள் திருட்டு
இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது, நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பக்கவாட்டில் உள்ள மின் இணைப்பு பெட்டி மீது ஏறி அங்கிருந்து கடையின் மேற் பகுதிக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த தகர சீட்டை கிழித்து கடையினுள் அமைக்கப்பட்டிருந்த அட்டையை பிரித்து உள்ளே கீழே இறங்கி உள்ளனர்.
 பின்னர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 12 பீர் பாட்டில்கள், 6 புல் ரம் பாட்டில்களும், 12 பிராந்தி புல் பாட்டில்கள் மற்று கல்லாவில் இருந்த ரூ.2500 மற்றும் கடையின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்களையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து டாஸ்மாக் கடையின் உள்பகுதியில் உள்ள 3 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாக இருந்த காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், பணம், கண்காணிப்பு கேமராக்களை திருடி சென்ற மர்மநபர்களை பசுபதிபாளையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்