மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் பெய்த பலத்த மழையால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.

Update: 2021-10-29 18:31 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் பெய்த பலத்த மழையால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.
பலத்த மழை
தென்மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான காரணத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
குறிப்பாக மயிலாடுதுறை உள்பட 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த மழை 3 நாட்கள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மயிலாடுதுறை பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்தார். இதன் காரணமாக அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்படவில்லை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை 7 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- மயிலாடுதுறையில் 13 மி.மீ., தரங்கம்பாடியில் 23 மி.மீ., சீர்காழியில் 18 மி.மீ., மணல்மேட்டில் 7 மி.மீ., கொள்ளிடத்தில் 12 மி.மீ. என சராசரியாக மாவட்டத்தில் 15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. 
மழை நீர் தேங்கி நின்றன
இதன் காரணமாக மயிலாடுதுறை நகரில் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. குறிப்பாக நகராட்சி அலுவலகம் முன்பு தரங்கம்பாடி சாலையில் மழைநீர் தேங்கி ஆறு போல காட்சியளித்தது. இதேபோல காமராஜர் சாலையில் பசுபதி தெரு சந்திப்பு அருகே மழைநீர் தேங்கி சாலை குளம் போல காட்சியளித்தது. இந்த கனமழை காரணமாக நேற்று மயிலாடுதுறை பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவினாலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பொறையாறு
தரங்கம்பாடி, பொறையாறு, செம்பனார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. நேற்று பகல் நேரத்தில் மழை பெய்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இந்த மழையால் பொறையாறு, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், மேமாத்தூர், கீழ்மாத்தூர், சங்கரன்பந்தல் விசலூர், எடுத்துக்கட்டி, பரசலூர், திருச்சம்பள்ளி, விளநகர், மேலப்பாதி, காலகஸ்திநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் உள்ள கடைத்தெருவில் கூட்டம் குறைவாக இருப்பதால் வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
திருவெண்காடு
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட கொள்ளிடம், சீர்காழி, திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. மேலும் பகல் முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழையால் சாலைகள் மற்றும் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியது. இந்த மழையின் காரணமாக பூம்புகார், தரங்கம்படி, சந்தரபாடி, சின்னங்குடி உள்ளிட்ட கடலோர கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பூம்புகார் பகுதியில் இரண்டு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. பின்னர் பழுதை சரி செய்து பூம்புகார் பகுதியில் மின் வினியோகம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்