திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை ரூ.31 ஆயிரம் சிக்கியது
திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.31 ஆயிரம் சிக்கியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்தில் வணிகவரித்துறையை சேர்ந்த ஊழியர் ஒருவர், அங்குள்ள கடைகளில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜூக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா மற்றும் போலீசார் வேடசந்தூர் பகுதியில் நேற்று மாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்தில் செயல்படும் வேடசந்தூர் வட்டார வரிவிதிப்பு அலுவலக உதவியாளர் ஒருவர் அங்குள்ள கடைகளில் பணம் வசூலிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் அலுவலகம் நோக்கி வந்த அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களின் வாகனங்களில் பின்தொடர்ந்து வந்தனர்.
ரூ.31 ஆயிரம் பறிமுதல்
பின்னர் அவர் திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்துக்குள் சென்றதும், பின்தொடர்ந்து சென்ற போலீசார் அவரை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவருடைய சட்டை பையில் ரூ.31 ஆயிரத்து 100 இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த தொகைக்கான ஆவணங்கள் எதுவும் உள்ளதா? என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே அவரிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபாவளி வசூல் மூலம் அவருக்கு அந்த பணம் கிடைத்ததா? இந்த வசூல் வேட்டையில் வேறு யாருக்கேனும் அவருடன் தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தீபாவளி வசூலில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.