ஊராட்சி செயலாளர்கள் சார்பில் முதல் அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
திருப்பத்தூரில் ஊராட்சி செயலாளர்கள் சார்பில் முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. இதில் 2,500 தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் ஊராட்சி செயலாளர்கள் சார்பில் முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. இதில் 2,500 தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தபால் அனுப்பும் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள், கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களை 3 ஆண்டுக்கு ஒருமுறை ஒன்றியத்திற்குள் பணி மாறுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
முதல்-அமைச்சருக்கு தபால்களை அனுப்பிவைத்து தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பி.கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் குமரேசன் வரவேற்றார்.
2,500 தபால்கள்
இதில் 2500 தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எம்.சரவணன், மாநில இணைச் செயலாளர் எஸ்.எம்.கிருஷ்ணன்ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள் எம்.அண்ணாமலை, ரமேஷ், சுதாகர், மேகநாதன், ராஜேந்திரன் உள்பட ஊராட்சி செயலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ராமு நன்றி கூறினார்.