வேட்டவலம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு
வேட்டவலம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது
வேட்டவலம்
வேட்டவலம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
புறவழிச்சாலை
வேட்டவலம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விதிஎண்:110-கீழ் வேட்டவலம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, புறவழிச்சாலை அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்து அப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கு.பிச்சாண்டி, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வேட்டவலத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும், என அறிவித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அறிவித்ததுபோலவே வேட்டவலம் புறவழிச்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அதற்குண்டான பணிகள் நடந்து வருகிறது.
பணிகள் உடனடியாக நடைபெறும்
அதன் ஒரு பகுதியாக பைபாஸ் சாலை அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வேட்டவலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் மஞ்சுளா, உதவி செயற்பொறியாளர் தனசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, இளநிலை உதவியாளர் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் அல்லி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், காமராஜ், கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ்காந்தி, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ப.முருகையன், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடனடியாக நடைபெறும்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் புறவழிச்சாலை அமைப்பது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பொதுமக்களின் கருத்துகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் உடனடியாக நடைபெறும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.