லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
நெல் அறுவடை எந்திர தொழிலாளியிடம் காட்பாடி சோதனைச்சாவடி ஊழியர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் சப் -இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காட்பாடி
நெல் அறுவடை எந்திர தொழிலாளியிடம் காட்பாடி சோதனைச்சாவடி ஊழியர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் சப் -இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நெல் அறுவடை எந்திரம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள திருச்சுழியூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயபிரபாகரன். இவர் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு ஆந்திரா செல்ல பர்மிட் வாங்கினார். பர்மிட் உடன் ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா ரூ.500 என சோதனைச் சாவடி ஊழியர் ரூ.2.500 லஞ்சமாக கேட்டார். அந்த பணத்தை ஊழியரிடம் கொடுக்கும்போது வீடியோவை எடுத்துள்ளனர்.
லஞ்சம் வாங்கினார்
பின்னர் அங்கிருந்து தமிழக எல்லையான கிறிஸ்டியான்பேட்டை செல்லும்போது காட்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் என்பவர் இவர்களை மடக்கி பணம் கேட்டுள்ளார். அதற்கு நெல் அறுவடை எந்திர தொழிலாளர்கள் வாக்குவாதம் செய்தனர். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கோபமடைந்து சோதனை சாவடியில் ஒரு வாகனத்துக்கு ரூ.500 கொடுக்கிறீர்கள். எனக்கு கொடுக்க கசக்கிறதா என கேட்கிறார். பணம் கொடுக்கவில்லை என்றால் வழக்குப் பதிவு செய்வேன் என்கிறார். இதனால் அவர்கள் பணத்தை கொடுக்கின்றனர். பணம் கொடுப்பதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் ஆந்திராவிற்கு சென்று விட்டனர்.
பணியிடை நீக்கம்
இந்த இரண்டு வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது நேற்று முழுவதும் பல்வேறு இடங்களில் வைரலானது. இதனை பார்த்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் நெல் அறுவடை எந்திர தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
காட்பாடி ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடியில் இந்த மாதம் 1-ந் தேதி தான் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் பெண் அதிகாரி சிக்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.