கத்தியால் குத்தி பெண் படுகொலை

திருத்துறைப்பூண்டி அருகே நிலத்தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-10-29 17:56 GMT
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே நிலத்தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிலத்தகராறு 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கொக்கலாடி அரக்கரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கொக்கலாடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரிடம் தனது நிலத்தை ஒத்திக்கு கொடுத்துள்ளார். தற்போது வேலாயுதம் மற்றும் ராமமூர்த்தி இருவரும் இறந்து விட்டனர்.
இந்த நிலையில் வேலாயுதம் மருமகள் விமலா(வயது 40) தனது மாமனார் கொடுத்த நிலத்தை திருப்பி தருமாறு ராமமூர்த்தி மகன் ரவி மற்றும் அவரது மனைவி ரேணுகாவிடம் கேட்டுள்ளார். ஆனால் ரவியும்,  அவரது மனைவி ரேணுகாவும் நிலத்தை திருப்பி தர முடியாது என கூறி உள்ளனர். இது ெதாடர்பாக இரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது.
இரு தரப்பினர் மோதல்
இந்த நிலையில் நேற்று காலை விமலா பிரச்சினைக்குரிய நிலத்தில் வேலி அமைத்து விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரேணுகா அவரது கணவர் ரவி மற்றும் ரவியின் சகோதரர்கள் கண்ணன், முத்துராஜா, மனோன்மணி ஆகியோர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வந்து விமலா நிலத்தில் வைத்து இருந்த வேலியை பிரித்துள்ளனர். 
தகவல் அறிந்து அங்கு வந்த விமலா தரப்பினருக்கும், ரேணுகா  தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் அரிவாள், கத்தி உள்பட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
கத்தியால் குத்திக்கொலை
இந்த மோதலின்போது கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த விமலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது
இந்த மோதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த ரவியின் சகோதரர் மனோன்மணி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேணுகா அவரது கணவர் ரவி மற்றும் ரவியின் சகோதரர்கள் கண்ணன், முத்துராஜா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலத்தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்