நாகை புதிய கடற்கரை ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்

நாகை புதிய கடற்கரை ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2021-10-29 17:49 GMT
நாகப்பட்டினம்:
நாகை புதிய கடற்கரை ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார். 
ஆய்வு 
நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நாகைக்கு வந்தார். பின்னர் நாகை புதிய கடற்கரையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நாகை 30-ம் ஆண்டு விழாவை யொட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட மகாத்மா காந்தி மண்டபத்தை திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் காளான் விதை உற்பத்தி ஆய்வு கூடத்தினை திறந்து வைத்தார்.
அனைத்துத்துறை ஆய்வு கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு  இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், செல்வராசு எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டங்களில் வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணித்து துரிதப்படுத்திட அமைச்சர்களை நியமித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இன்று (நேற்று) நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. 
ரூ.10 கோடி ஒதுக்கீடு 
நாகை புதிய கடற்கரைக்கான நீலநிறச்சான்று பெறும் வகையில் கடற்கரையை மேம்படுத்துவதற்காக 32 வகையான வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
முன்னதாக ரூ.77 லட்சத்து 93 ஆயிரத்து 930 மதிப்பீட்டில் 125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
இதில் எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷா நவாஸ், நாகை மாலி,  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, துணை ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்