பெண் கல்வி வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்
பெண் கல்வி வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள் என்று திருப்பூரில் சிக்கண்ணா அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் கூறினார்.
திருப்பூர்
பெண் கல்வி வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள் என்று திருப்பூரில் சிக்கண்ணா அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் கூறினார்.
பெண் கல்வி
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் உள்ள குமரன் அரங்கில் 48-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் 2017-2018, 2018-2019-ம் ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கல்லூரி வளர்ச்சி அறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முருகவேல் பங்கேற்று பேசியதாவது:-
சமூகத்தில் பெண்களின் பங்கையும், அந்தஸ்தையும் மாற்றக்கூடிய காரணியாக கல்வி உள்ளது. கல்வி மூலம் பெண்கள் அதிகாரத்தை கைப்பற்ற எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே கல்வி கற்றது போலாகும். சமூகத்தில் பெண் கல்வி வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள். நீங்கள் எண்ணவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை முடிவு செய்து உயர்ந்த இலக்கை நிர்ணயித்து கடினமாக உழைத்தால் உங்கள் இலக்கை அடைவீர்கள். மிகுந்த நம்பிக்கையுடன் கடுமையாக உழைத்தால் குறிக்கோளை அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
924 பேருக்கு பட்டம்
விழாவில் இளநிலை பட்டப்படிப்பில் 717 மாணவர்களுக்கும், முதுநிலை பட்டப்படிப்பில் 207 மாணவர்களுக்கும் என மொத்தம் 924 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற இளநிலை வரலாற்று துறை மாணவி சுபஸ்ரீ (2-வது இடம்), உமாவதி (7-வது இடம்), கிருத்திகா (8-வது இடம்), ஜெயமணி (9-வது இடம்), இளநிலை விலங்கியல் துறையில் மாணவி பத்ஸ்ரீ (7-வது இடம்), இளநிலை வேதியியல் துறையில் மாணவர் பழனிச்சாமி (9-வது இடம்), முதுநிலை விலங்கியல் துறையில் மாணவி தாரணி (5-வது இடம்), இயற்பியல் துறையில் ஜனனி (6-வது இடம்) ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.