8 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
8 பவுன் நகை திருட்டு
தாராபுரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது36). இவர் பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி கிறிஸ்துவ அனுப்பர் தெருவில் உள்ள மாமியார் இறப்பிற்கு சென்றுவிட்டு அங்கே தங்கியிருந்தார். 2 நாட்கள் கழித்து 16-ந் தேதி கண்ணன் நகர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது நாகராஜ் வீட்டினுள் சென்று பீரோவை பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் கலைந்து கிடந்தது. அப்போது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் சங்கிலியை காணவில்லை.இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தார்.
கைது
இந்நிலையில் நேற்று மதியம் தாராபுரம் சர்ச் ரோட்டில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தனியாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறியதால் போலீஸ் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் கண்ணன் நகரில் உள்ள வீட்டில் 8 பவுன் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்ற வெள்ளிக்கிழமை ராமசாமி (30) மீது இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.