லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொது மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரிகளில் அதிகபாரம்
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு லாரிகளில் கற்கள் ஏற்றி செல்லப்பட்டு வருகிறது. அந்த லாரிகளில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி செல்வதாக அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம் வழியாக 4 லாரிகள் அதிகபாரம் ஏற்றி சென்றதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அங்கு திரண்டு அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினார்கள்.
சிறைபிடித்து போராட்டம்
பின்னர் பொதுமக்கள் அந்த லாரிகளை சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வடக்கி பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் லாரிகளில் அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
எனவே இந்த வழியாக கற்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றனர்.
பறிமுதல்
மேலும் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் லாரிகளில் அதிக பாரம் மற்றும் உரிமம் இல்லாமல் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஒரு லாரியில் 25 டன் வரை கற்களை ஏற்றிச் செல்லலாம். ஆனால் விதிமுறைகளை மீறி கூடுதலாக 15 டன் வரை ஏற்றிச் சென்று உள்ளனர். மேலும் கேரள பதிவு எண் கொண்ட லாரிகளை உரிமம் இல்லாமல் தமிழகத்திற்குள் இயக்கியது தெரியவந்தது.
கடும் நடவடிக்கை
இதைதொடர்ந்து 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதிக பாரம் மற்றும் உரிமம் இல்லாமல் இயங்கும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.