நீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு சப் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

நீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு சப் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

Update: 2021-10-29 17:08 GMT
பொள்ளாச்சி

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன நீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர்பங்கீடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பி.ஏ.பி. திட்டத்தில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு, திருமூர்த்தி பாசன புதிய ஆயக்கட்டுக்களும் உண்டான பாசன முறைகள், பாசன அமைப்புகள் மற்றும் நீர் வினியோகம் மாறுபடும். 

குறைவான நீரே பரிந்துரை

ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு அணை கட்டும்போதே 3,500 மில்லியன் கனஅடி நீர் வழங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் பாலாறு படுகையில் ஆயக்கட்டு விரிவாக்கம் தொடர்பாக திட்டத்தின் மூலம் கிடைக்கும் சராசரி நீரை கருத்தில் கொள்ளாமல் அதிகரிக்கப்பட்ட 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்புகள்தான் பற்றாக்குறைக்கு காரணம் ஆகும். 

இதுவரை ஒரு சென்ட் நிலம் கூட அதிகரிக்கப்படாமல் அதே 44 ஆயிரத்து 380 ஏக்கர் பாசன நிலத்தில் ஆண்டுக்கு 22 ஆயிரம் ஏக்கர் வீதம் பிரித்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறைவான பாசனம் பெற்று வருகிறோம். பாலாறு படுகையின் அழுத்தத்தால் கடந்த சில ஆண்டுகளாக அணைகள் நிரம்பி தண்ணீர் கடலுக்கு சென்றாலும், ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு குறைவான நீரையே பரிந்துரை செய்கின்றனர்.

நீர்பங்கீடு 

உயர்மட்ட குழு பரிந்துரைப்படி ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன கால்வாய்களே ஒருமடை விட்டு ஒருமடை பாசன திட்டத்திற்கு உட்படும். ஆனால் ஆழியாறு புதிய ஆயக்கட்டில் 50 சதவீத கால்வாய்கள் ஆயிரம் ஏக்கருக்கு குறைவாக பாசன பெறும் பகுதிகளாகும். 

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பகுதிக்கு மட்டும் 500 ஏக்கர் என நிர்ணயித்தால் மட்டுமே ஒருமடை விட்டு ஒருமடை பாசன திட்டம் வெற்றி பெறும். ஆழியாறு பாசனத்தில் ஒரு சுற்று என்பது 15 நாள் வீதமும், திருமூர்த்தி பாசனத்தில் ஒரு சுற்று என்பது 17 நாள் வீதமும் நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போது திருமூர்த்தி பாசனத்தில் ஒரு சுற்றுக்கு 26 நாள் வரை நீட்டித்து நீர்பங்கீடு வழங்கப்படுகிறது. 

2,880 மில்லியன் கனஅடி

திருமூர்த்தி பாசனத்திற்கு கூடுதலாக நீர் வழங்குவது பற்றி எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் குறைந்த பாசன பரப்பான ஆழியாறு புதிய பாசனத்திற்கு நீர் இருக்கும் காலங்களில் 90 நாட்களுக்கு 2,880 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும்.

அனைத்தும் ஒரே திட்டமாகவே கருதினால் எங்களுக்கும் ஒரு சுற்றுக்கு 15 நாள் என்பதை மாற்றி திருமூர்த்தி பாசனம் போலவே நாட்களை நீட்டித்து தர வேண்டும். தொடர்ந்து எங்களுக்கு நீர் குறைவாக வழங்குவதால் பாசன நிலங்கள் தரிசாக மாறி வருகிறது. 

எனவே எங்கள் பாசன பகுதியின் நீர் பற்றாக்குறை பிரச்சினையை சரிசெய்து நிரந்தர தீர்வை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதில் சங்க தலைவர் அசோக்குமார், செயலாளர் செந்தில், பொருளாளர் கன்னிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்