தொப்பூர் அருகே ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது
தொப்பூர் அருகே ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
நல்லம்பள்ளி:
கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி ஒரு கார் நேற்று இரவு வந்து கொண்டு இருந்தது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வெள்ளக்கல் என்ற இடத்தை கடந்தபோது திடீரென கார் தீப்பிடித்து கொண்டது. இதனால் காரில் வந்த நபர்கள் கீழே இறங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து மளமளவென எரியத்தொடங்கியது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.